Thayagam Tamil Radio Australia

சிட்னியில் சுறாக்கள் அட்டகாசம்: 48 மணி நேரத்தில் 4 தாக்குதல்கள் – கடற்கரைகள் மூடல்!

January 21, 2026

Spread the love

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்கு சுறாத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை போர்ட் மேக்குவாரிக்கு அருகே உள்ள லைம்பர்னர்ஸ் கிரீக் தேசிய பூங்கா பகுதியில் 39 வயதுடைய நபர் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். இதில் அவரது மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக, திங்கள்கிழமை மாலை மேன்லி பகுதியில் உள்ள நோர்த் ஸ்டெய்ன் கடற்கரையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் காலில் சுறா கடித்ததில் அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை வாக்லூஸில் உள்ள ஷார்க் பீச் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் சுறாவால் தாக்கப்பட்டு இரு கால்களிலும் பலத்த காயமடைந்தான். மேலும், டீ ஒய் கடற்கரையில் 11 வயது சிறுவன் ஒருவன் பயணித்த சறுக்குப் பலகையை (Surfboard) சுறா கடித்த போதிலும், அந்தச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினான். சிட்னி துறைமுகப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடல் நீர் கலங்கலாக இருப்பதால், அங்கு ‘புல் ஷார்க்’ (Bull Sharks) ரக சுறாக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அதிகாரிகள், தற்போது கடலில் நீந்துவது பாதுகாப்பற்றது என்றும், மக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து உள்ளூர் நீச்சல் குளங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் ட்ரோன் மூலமான கண்காணிப்பு மற்றும் உயிர் காக்கும் படையினரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.