Thayagam Tamil Radio Australia

எம்மை பற்றி

தாயகம் தமிழ் ஒலி பரப்புச் சேவை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 24 மணி நேர சமூக வானொலியாகும்

தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகத்தின் சமூக வானொலியாக 2015ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தனது ஒலிபரப்புச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. அவுஸ்திரேலியாவில் தனிப்பட்ட வானொலிக் கருவிகளை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமான சேவையாக அல்லாது, அனைத்துலக நேயர்களுக்குமான முதலாவது முழுநேர அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பாக இந்தச் சேவை உருவாக்கப்பட்டிருந்தது.  

 

வானொலி ஆரம்பித்த காலத்தில் நிகழ்ச்சித் தயாரிப்புகளிலும் மற்றும் ஒலிபரப்புக்களிலும்  இணைந்துகொண்டவர்கள் பலர் அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் வெவ்வேறான பல வானொலிகளில் ஏற்கெனவே பணியாற்றியவர்கள் – பல்வேறு படிநிலைகளில் இருந்தவர்கள். மற்றும் சிலர் புதியவர்களாகவும் இருந்தார்கள் ஒலிபரப்புத்துறையில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட  இவர்களை ஒன்றாக இணைத்து தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தார்  விஜய் இராஜகோபால்.

 

தன்னார்வமும்  துணிச்சலும் கொண்ட இளைஞரான விஜய் பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்யும் வல்லமையும்  தெளிவுடன் கூடிய நம்பிக்கையும் அதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தும் ஆற்றலும் கடுமையான உழைப்பும் கொண்டவராக இருந்தார். இவற்றுடன் ஒலிபரப்புத்துறையில் ஆர்வமும் ஒரு தசாப்த கால அனுபவமும் அவருக்கு இருந்தன.

 

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவரான   ஒலிபரப்பிலும் ஒளிபரப்பிலும் பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த துறை சார்ந்த முன்னோடிகளில் ஒருவரான சின்னத்துரை எழில்வேந்தனைத் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் நிகழ்ச்சிப் பணிப்பாளராக விஜய் நியமனம் செய்தார்.

 

இவர்களுடன் காரை செல்வராஜா, களுவாஞ்சிக்குடி யோகன், ஹரிபாலா, கருணாகரன், குலேந்திரன், ஞானா அசோகன், சாரதா அமிர்தலிங்கம், மயூரன், சந்தோஷ், செல்வி பக்தா, சத்தியபாலன், யூசுஃப் ஆகியோர் அன்றைய தினத்தில் ஒரே குழுமமாக இணைந்தார்கள்.

 

இவர்கள் அனைவருமே ஒலிபரப்புத்துறையில் பல ஆண்டுக்கால அனுபவம் உடைய திறமைசாலிகள். நல்ல குரல்வளமும் பலவேறு தளங்களிலான இரசனையும் பரந்துபட்ட அறிவும் அவற்றைத் திறம்படப் பிரயோகிக்கும் ஆற்றலும் உடையவர்கள். அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகத்துடன் நன்கு ஒட்டி உறவாடுபவர்கள். சமூகத்தின் மாறிவரும் தேவைகளை உணர்ந்து பணிபுரியும் வல்லமை கொண்டவர்கள். புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக உள்வாங்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

 

வாணி எழில்வேந்தன், முரளி, நிலவன், யாழவன், துஷி, ரஞ்சித், துஷா, திலீப், உஷா, சந்திரலேகா, கவிதா, வாமதேவா, நிதர்ஷினி , லிண்டா , ரஞ்சகுமார் ஆகியோர் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில் முதலாவது ஆண்டு காலத்தில் கட்டங்கட்டமாக இணைந்து கொண்டார்கள்.

 

பட்டறிவு கொண்ட எழில்வேந்தன், ரஞ்சகுமார், சந்திரலேகா வாமதேவா, வாமதேவா ஆகியோருடன் துடிப்பான இளைய தலைமுறையும் இணைந்த இந்தக் குழுமத்தினால் பரந்த ஒரு நேயர் சமூகத்துக்கான நிகழ்ச்சிகளை வழங்க முடிந்தது. மூத்த மற்றும் நடுவயதினரின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யும் அதேவேளையில்,  . இளைஞர்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளையும் இவர்கள் தொகுத்து வழங்கினார்கள். ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை இந்திரா பரமானந்தன், அருட்சகோதரர் டானியல் ஆகியோர் நடாத்தினார்கள்.

 

தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை நவீன எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. டினோ முத்துலிங்கம், ரொபேர்ட் ஆகிய துறைசார் விற்பன்னர்கள் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் கலையகத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவுவதில் பெரிதும் உழைத்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தின் இற்றைப்படுத்தல்களை அவசியமானதும் உசிதமானதுமான தருணங்களில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. இதன் பயனாக ஒலித்தெளிவின் தரம் மிக மேம்பட்டதாக அமைவதுடன், நடமாடும் கலையகத்துடன் கூடிய நேரலை நிகழ்ச்சிகளை வழங்குவதில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையினால் திறம்பட இயங்க முடிகின்றது.

 

தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் மற்றுமொரு விஸ்தரிப்பு நடவடிக்கையாக, மெல்பேர்ன் நகரத்திலிருந்து நேரடி ஒலிபரப்பைச் செய்யக்கூடிய கலையகமொன்று 2016 செப்டெம்பர் 25ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்து. எனினும் தற்போது சிட்னி இருந்தே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

 

காலத்துக்கு காலம் புதிய ஒலிபரப்பாளர்கள் இணைந்து தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றார்கள். அந்த வகையில் சிவா சிவானந்தன், ஆசி கந்தராஜா, சிவ வரதன், பாலா விக்னஸ்வரன், தாமரை, மணி கிருஷ்ணன், நிரா காந்தன் ஆகியோரும் இணைந்து கொண்டார்கள்.

தமிழர் தலைமுறைகளாக வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் செறிந்து வாழும் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், மற்றும் தமிழர்களும் தமிழ் அறிந்தோரும் வாழும் எல்லா இடங்களிலும் தாயகம் ஒலிபரப்பு விரும்பிக் கேட்கப்படுகிறது

 

இலகுவாக்கப்பட்ட அண்மைக்காலத் தொழில்நுட்பத்தின் அனுசரணையுடன் நாளாந்த நிகழ்ச்சிகள் பல முகநூல் (Facebook) மற்றும் யூரியூப் (YouTube) வழியாக நேரலையில் ஒளிபரப்பாகவும் வருகின்றன. கலையக நிகழ்ச்சிகள் மட்டுமன்றி மெய்நிகர் வழியான செவ்விகளும் கலந்துரையாடல்களும், மண்டபங்களிலும் வெளிக்களங்களிலும் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்பாகினறன்

 

தன்னார்வ அடிப்படையில் பணிபுரியும் ஒலிபரப்பாளர்களும் இயக்குனரும் தரமானவையும் சமகாலத்துக்குப் பொருத்தமானவையுமான நிகழ்ச்சிகள் கிராமமாக நடத்தப்படவேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள். இவ்வகையில், வருமான நோக்கற்ற இந்த வானொலிச் சேவையின் நோக்கமே இஃது ஓர் உண்மையான சமூகநலன் சார்ந்த வானொலியாக இருக்கவேண்டும் என்பதே. அவ்வகையில், வையகம் தழுவிய நேயர்களின் ஒரு வான்வழித் தோழனாகத் தாயகம் தொடர்ந்து சேவை புரிகிறது.