Thayagam Tamil Radio Australia

உலகைச் சுற்றும் பயணிகள்: 2025-இல் அதிக வரவேற்பைப் பெற்ற டாப் 10 நகரங்கள்!

January 21, 2026

Spread the love

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கிலும் சுமார் 110 கோடி மக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், 2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3.03 கோடி வெளிநாட்டுப் பயணிகள் இந்நகரத்திற்கு வருகை தந்துள்ளனர். இது அந்நகரத்தின் மொத்த மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவின் ஹொங்கொங் நகரம் பிடித்துள்ளது; அங்கு கடந்த ஆண்டில் 2.32 கோடி பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 2.27 கோடி பயணிகளுடன் லண்டன் மூன்றாம் இடத்தையும், 2.04 கோடி பயணிகளுடன் சீனாவின் மக்காவ் நகரம் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன. ஐந்தாம் இடத்தில் துருக்கியின் இஸ்தான்புல் (1.97 கோடி பயணிகள்) நகரமும், ஆறாம் இடத்தில் 1.95 கோடி பயணிகளுடன் துபாய் நகரமும் உள்ளன.

பட்டியலின் ஏழாம் இடத்தில் சிங்கப்பூர், எட்டாம் இடத்தில் அந்தால்யா, ஒன்பதாம் இடத்தில் பாரிஸ் மற்றும் பத்தாம் இடத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும், 2026-ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்குச் சிறந்த 10 நகரங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், மாட்ரிட், டோக்கியோ, ரோம் மற்றும் மிலன் போன்ற புகழ்பெற்ற நகரங்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளன.