Thayagam Tamil Radio Australia

ரூ. 6 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்: குஜராத்தில் வாடிக்கையாளர் போல நடித்து 7 பேரைத் தூக்கிய போலீஸ்!

January 21, 2026

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் நகரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்புப் போலீஸ் குழு (SOG) நடத்திய அதிரடி வேட்டையில், சுமார் 5.85 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 மில்லி லிட்டர் கொடிய நாகப்பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவரிடமிருந்து இந்த விஷம் பெறப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றபோது இந்தக் கும்பல் சிக்கியுள்ளது. ரகசியத் தகவல் கிடைத்ததும், போலீஸார் வாடிக்கையாளர்கள் போல வேடமணிந்து இந்தக் கும்பலுடன் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பேரம் பேசி, அவர்களைப் பொறி வைத்துப் பிடித்தனர்.

முதலில் சோனி என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் இருந்த சிறிய கொள்கலனில் வீரியம் மிக்க பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட வியூகத்தின்படி, அந்த நபரைப் பயன்படுத்தியே மற்ற கூட்டாளிகளையும் வரவழைத்தனர். அப்போது சுமார் 8 கோடி ரூபாய்க்கு அந்த விஷத்தை வாங்க ஒப்புக்கொண்டு வந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 4 பேர் வதோதராவைச் சேர்ந்தவர்கள், இருவர் சூரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக ‘ரேவ் பார்ட்டி’ (Rave Parties) எனப்படும் போதைப் பார்ட்டிகளில், மதுவுடன் கலந்து போதைக்காகப் பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் இவ்வளவு பெரிய மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய அகமதாபாத் நகைக்கடை வியாபாரியைத் தேடி வரும் போலீஸார், இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.