மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில், துருக்கியின் செய்னெப் சோன்மேஸ் மற்றும் ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் மோதினர். போட்டியின் இரண்டாவது செட் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நடுவர் இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிறுமி (Ball Girl) திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்ததும் சிறிதும் தாமதிக்காத சோன்மேஸ், உடனடியாக அந்தச் சிறுமியிடம் ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடித்தார்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக அந்தச் சிறுமி மிகவும் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், சோன்மேஸ் அவரை நிழலான பகுதிக்கு அழைத்துச் சென்று முதலுதவி கிடைக்க வழிவகை செய்தார். மருத்துவக் குழுவினர் வருவரை அந்தச் சிறுமிக்குத் துணையாக நின்ற அவர், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி தோல்விகளை விட சக மனிதர்களின் நலனே முக்கியம் என்பதை உலகுக்கு நிரூபித்தார். இது குறித்துப் பின்னர் கருத்துத் தெரிவித்த சோன்மேஸ், “ஒரு சிறந்த டென்னிஸ் வீரராக இருப்பதை விட, ஒரு நல்ல மனிதனாக இருப்பதே எப்போதும் முக்கியம். அந்தச் சிறுமி சிரமப்படுவதைக் கண்டதும் அவருக்கு உதவ வேண்டும் என்பது எனது இயல்பான உந்துதலாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சுமார் ஆறு நிமிடத் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கிய இந்தப் போட்டியில், சோன்மேஸ் அபாரமாக விளையாடி 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்னில் நிலவும் கடும் வெப்பம் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கருதப்படும் நிலையில், டென்னிஸ் ஆஸ்திரேலியா நிர்வாகம் அந்தச் சிறுமி சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. டென்னிஸ் மைதானத்தில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.