Thayagam Tamil Radio Australia

பாப்புவா நியூ கினியில் அவுஸ்திரேலிய சுற்றுலா கப்பல் விபத்து: 80 பயணிகள் நாடு திரும்ப நடவடிக்கை!

December 29, 2025

Spread the love

பாப்புவா நியூ கினியின் மொரோப் மாகாணக் கடற்கரைக்கு அப்பால் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய அவுஸ்திரேலியாவின் ‘கோரல் அட்வென்ச்சர்’ சுற்றுலா கப்பலில் இருந்த பயணிகள், தனி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் லா (Lae) நகருக்கு அருகில் உள்ள டிரெகர்ஹாபன் பாயிண்ட் (Dregerhafen Point) பகுதியில் இந்தக் கப்பல் பாறையில் மோதியுள்ளது. கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்ட காலத்திற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே சுற்றுலாவை முடித்துக் கொண்டு பயணிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வர அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விபத்து நடந்த சமயம் கப்பலில் 80 பயணிகள் மற்றும் 43 ஊழியர்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, முதற்கட்ட சோதனையில் கப்பலுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பலத்த நீரோட்டம் காரணமாகக் கப்பல் தரைதட்டியிருக்கலாம் எனவும், வழக்கமாக உள்ளூர் படகுகள் பயன்படுத்தும் பாதையை விடுத்து “உயர்ந்த பவளப்பாறைகள்” நிறைந்த பாதையில் கப்பல் சென்றதே விபத்துக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ‘கோரல் அட்வென்ச்சர்’ கப்பல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘கிரேட் பேரியர் ரீஃப்’ தீவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனியாக விடப்பட்டு உயிரிழந்தது தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. தரைதட்டிய கப்பலை மீண்டும் பாதுகாப்பாக மிதக்க வைப்பதற்கான மேலதிக சோதனைகளை அவுஸ்திரேலிய மற்றும் பாப்புவா நியூ கினி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.