Thayagam Tamil Radio Australia

மன்னார் நீதிமன்ற இரட்டைக்கொலை: பிரதான சந்தேகநபர் கையெறி குண்டுடன் கைது

December 29, 2025

Spread the love

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் உட்பட இருவரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் மன்னார் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று (28) காலை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமன்னார் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் இவர்கள் பிடிபட்டனர். இதன்போது, இந்த இரட்டைக் கொலையைத் திட்டமிட்ட பிரதான சந்தேகநபரிடமிருந்து நேரடிப் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய ஒரு கைக்குண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.