புதுடெல்லி: புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக இன்று அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த ஏ.ஐ 887 (AI 887) என்ற அந்த விமானம், இன்று காலை 6:10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அதன் வலதுபுற என்ஜின் திடீரென செயலிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்து விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினர்.
இது இரட்டை என்ஜின் கொண்ட விமானம் என்பதால், விமானிகளின் துரித நடவடிக்கையால் ஒரு என்ஜின் உதவியுடன் காலை 6:52 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயணிகளின் பயணத்தைத் தொடர மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
