Thayagam Tamil Radio Australia

வட மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து: ஆசிரியர் சங்கத்தின் சட்டப் போராட்டத்திற்கு வெற்றி

December 17, 2025

Spread the love

வட மாகாணத்தில் ‘சேவையின் தேவை’ எனக் குறிப்பிட்டு அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தையும் இரத்து செய்வதாக மாகாண கல்வி அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்த பெரும் கொந்தளிப்பைத் தணித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழி ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்கள் காணப்படுவதாகக் குற்றம் சாட்டி, இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாகாண கல்வித் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சர்ச்சைக்குரிய அனைத்து இடமாற்றங்களையும் கைவிடுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடிவுறுத்தியது.

தொடர் போராட்டத்தின் அறுவடை இந்த இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் மூன்று நாட்களாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆசிரியர் சங்கத்தின் இந்தத் தொடர் போராட்டத்திற்கும், முன்னெடுக்கப்பட்ட சட்டப் போராட்டத்திற்கும் கிடைத்த பாரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

எதிர்காலக் கோரிக்கை இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், “இனிவரும் காலங்களில் அரசியல் தலையீடுகள் இன்றி, முறையான இடமாற்றக் கொள்கைகளைப் பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.