Thayagam Tamil Radio Australia

அதிக பணிச்சுமையால் இந்தியாவில் 33 அரச தேர்தல் அதிகாரிகள் தற்கொலை – வாக்காளர் கணக்கெடுப்பா? ஊழியர்களின் உயிரெடுப்பா?

December 17, 2025

Spread the love

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் முன்னெடுத்துள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) காரணமாக, கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் குறைந்தது 33 தேர்தல் அதிகாரிகள் (BLOs) உயிரிழந்துள்ளனர். இதில் பலர் தற்கொலை செய்துகொண்டதுடன், பணிச்சுமையே இதற்குக் காரணம் எனத் தற்கொலை குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்.

“மனிதத்தன்மையற்ற” பணிச்சுமை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராகப் பணியாற்றிய 50 வயதுடைய விஜய் குமார் வர்மா, பணிச்சுமை காரணமாக மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். “காலை முதல் நள்ளிரவு வரை அவரது தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். 200 படிவங்களை விரைவாக முடிக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிகாரிகள் அவருக்கு குறுஞ்செய்திகள் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளனர்,” என அவரது மகன் ஹர்ஷித் வர்மா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தூக்கமின்மையும் மன அழுத்தமும்

தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் இளநிலை அதிகாரிகள், தமக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் கூட தூங்க முடிவதில்லை எனத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குச் சென்று தரவுகளைச் சேகரிப்பதுடன், நள்ளிரவில் இணையதள சர்வர் (Server) சரியாக வேலை செய்யாத நேரத்திலும் கண்விழித்து தரவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்கொலைகளும் அரசியல் சர்ச்சைகளும்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 53 வயதுடைய உயிரியல் ஆசிரியை ரிங்கு தாராஃப்தார், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தில், “இந்த மனிதாபிமானமற்ற அழுத்தத்தை என்னால் இனி தாங்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளின் இந்த உயிரிழப்புகள் விடயத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் பதில்

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமான ஒரு பணிதான்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உரிய பயிற்சியோ அல்லது தொழில்நுட்ப உதவியோ இன்றி இவ்வளவு பெரிய பணியைத் திணிப்பது அதிகாரிகளின் உயிரைப் பறிப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.