யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதி ஒருவரின் சகோதரியிடம் யாழ்ப்பாணப் பொலிஸார் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
சிறைச்சாலையின் முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தது என்ன?
- பாதிக்கப்பட்டவர்: புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்.
- கைது விபரம்: கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்குச் செல்லாத குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
- சிகிச்சை நிலை: சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தலையில் காயம் ஏற்பட்டு, நவம்பர் 11ஆம் திகதி முதல் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை:
சகோதரியின் குற்றச்சாட்டு:
கடந்த வாரம் குறித்த இளைஞனின் சகோதரி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது, நவம்பர் 08ஆம் திகதி வைத்தியசாலையில் அண்ணாவைப் பார்த்தபோது அவர், “அடித்துப் போட்டாங்கள்” எனத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
சிறைச்சாலையின் மறுப்பு:
ஆனால், தாம் அடிக்கவில்லை என்றும், குறித்த இளைஞன் சிறைக்குள் ‘தடுக்கி விழுந்தார்’ என்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இளைஞனின் சகோதரி உண்மைக்குப் புறம்பான தகவலைத் தெரிவித்தார் எனக் கூறி, அந்தப் பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸ் நடவடிக்கை:
சிறைச்சாலை நிர்வாகத்தின் முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று (புதன்கிழமை) குறித்த பெண்ணை அழைத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டனர்.
தவறான தகவல் பரப்பப்பட்டதாகக் குடும்பத்தினர் வேதனை:
இதனிடையே, இந்த இளைஞன் ஊரில் நடைபெற்ற ஒரு கைக்கலப்பு தொடர்பான வழக்கு விசாரணையையே எதிர்கொண்டு வரும் நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்ததாகச் சில ஊடகங்களில் இளைஞனுக்கு கசிப்பு வழக்கு உண்டு என்றும், இளைஞனுக்கு ‘கசிப்பு சிக்’ (Kasippu Sick) என்ற புதுவகையான நோய் உண்டு என்றும் செய்திகள் வெளியாகின. இவ்வாறான தவறான தகவல்களால் இளைஞனின் குடும்பத்தினர் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
