மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர், மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, அகற்றப்பட்ட அந்தப் பெயர்ப் பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காட்டும் திசைப் பலகைகளை கடந்த நவம்பர் 3ஆம் திகதி நிறுவ ஆரம்பித்தது. ஆனால், பிரதேச சபையின் அதிகாரிகளினால் அந்தப் பலகைகள் நவம்பர் 22ஆம் திகதி கழற்றி அகற்றப்பட்டன. அப்பலகைகள் அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து உரிய விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையில், இந்தச் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.