சத்திரசிகிச்சை நடைபெறும் போது நோயாளிகளுக்கு மெல்லிய இசையை (Music) கேட்க வைப்பதன் மூலம், அவர்கள் விரைவாகக் குணமடைவதோடு, அவர்களுக்குத் தேவைப்படும் மயக்க மருந்தின் அளவும் குறைவதாகப் புதிய மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் (Maulana Azad Medical College) மருத்துவர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக சத்திரசிகிச்சையின் போது நோயாளிகள் முழு மயக்கத்தில் (General Anaesthesia) இருந்தாலும், அவர்களின் மூளையின் ஒரு பகுதி சத்தத்தை உணரும் நிலையில் விழி்ப்புடன் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, பித்தப்பை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக (Gallbladder removal) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தரப்பினருக்கு மயக்க நிலையில் இருக்கும்போது ‘ஹெட் போன்’ (Headphones) மூலம் மெல்லிய புல்லாங்குழல் மற்றும் பியானோ இசை ஒலிக்க விடப்பட்டது.
இதன் முடிவுகள் மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இசை கேட்க வைக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மற்றவர்களை விடக் குறைவான அளவிலேயே மயக்க மருந்துகளும் (Propofol), வலி நிவாரணிகளும் (Painkillers) தேவைப்பட்டுள்ளன. மேலும், சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இரத்தக் கொதிப்பு போன்றவை இவர்களுக்குக் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததோடு, சத்திரசிகிச்சை முடிந்த பின்னர் இவர்கள் மிகத் தெளிவாகவும் விரைவாகவும் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளனர்.
உடல் மயக்க நிலையில் இருந்தாலும், மன அழுத்தத்தைக் குறைப்பதில் இசை முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை அறைகளை நோயாளிகளுக்கு அச்சமில்லாத இடமாக மாற்றவும், மருந்துகளின் பக்க விளைவுகளைக் குறைக்கவும் இந்த முறை உதவும் என ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.