யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கூரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கண்டுபிடிப்புத் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பொருட்கள் போர்க்காலத்தில் இருந்து அங்கேயே கிடந்திருக்கலாம் என நம்புவதாகப் பொலிஸ் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி எஃப்.யூ. வூட்லர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த தகவலின்படி, நூலகத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது ஒக்டோபர் 30ஆம் திகதி முதன்முதலாக இரண்டு துப்பாக்கி சஞ்சிகைகளும் (Magazines), ஒரு சுருள் கம்பியும் கூரைக்குள் இருந்து மீட்கப்பட்டன. இது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுநாள் (31ஆம் திகதி) பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து அந்தப் பொருட்களை மீட்டெடுத்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளின் போது, நூலகக் கூரையின் அருகிலுள்ள மற்றொரு பகுதியில், ஒரு ரீ-56 தாக்குதல் துப்பாக்கி (T-56 assault rifle), மேலும் இரண்டு சஞ்சிகைகள், வெடிபொருட்கள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மேலதிக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, மேலும் ஆயுதங்கள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.