Thayagam Tamil Radio Australia

அவுஸ்திரேலிய வீராங்கனைகளை விமர்சித்த இந்திய அமைச்சர் சர்ச்சையில் 

October 27, 2025

Spread the love

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் இந்தோர் நகரில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் தங்கியிருந்த வீராங்கனைகளின் அறை கதவுகளின் முன் ஒருவர் நாகரிகமற்ற முறையில்   நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச பா.ஜ.க அரசின் அமைச்சர் உஷா தாகூர் அளித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இது அந்த வீராங்கனைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். அவர்கள் தங்களது உடை அணிவது, நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பதவியில் உள்ள அமைச்சர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குறை கூறியிருப்பது சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர், “ஒரு பெண் மீது தொல்லை நிகழ்ந்தால், அதன் பொறுப்பு குற்றவாளியிடம்தான் இருக்க வேண்டும். ஆனால் பெண்களை குறை கூறுவது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை,” எனக் கண்டித்துள்ளனர்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பலர் “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக அவர்களையே குறை கூறுவது அரசியல்வாதிகளுக்கு ஏற்றதல்ல” என்று பதிவிட்டுள்ளனர்.

மத்திய பிரதேச அரசு இச்சம்பவம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.