Thayagam Tamil Radio Australia

விடுதலை புலிகளால் செய்ய முடிந்ததை ஏன் இந்த அரசால் செய்ய முடியவில்லை

October 24, 2025

Spread the love

போதைப்பொருள் பிரச்சினையை முழுமையாக ஒழிக்க மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம்தான் தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஊடகங்களுக்கு அளித்த கருத்தில் அவர் கூறியதாவது –

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், முன்னணி அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரின் மகன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரின் விடுதலையை உறுதி செய்வதற்காக சுமார் ரூ. 20 இலட்சம் வரை லஞ்சம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அந்த முன்னணியின் தலைமை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியதாவது –
வட மாகாணத்தில் போதைப்பொருள் பரவுவதில் இராணுவத்தினரின் பங்கும் முக்கியமானதாக உள்ளது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மிகக் குறைவாக இருந்தது. அப்போது மக்கள் பாதுகாப்பு நோக்குடன் இயக்கம் செயல்பட்டதால், அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால், 2009 ஆம் ஆண்டு போரின் முடிவிற்கு பின்னரே வடக்கில் போதைப்பொருள் பரவல் பெருமளவில் தொடங்கியது. இன்றைய சூழலில், சில பகுதிகளில் இராணுவ முகாம்களே சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களாக மாறியுள்ளன என அவர் குற்றம் சாட்டினார்.

“யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளைக் குறைக்க அரசாங்கம் இராணுவத்தின் வழியே போதைப்பொருளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. அந்த புற்றுநோய் இன்று தெற்குவரை பரவியுள்ளது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல்நிலையங்கள் பெரும்பாலும் ஏற்க மறுப்பதாகவும், இதன் மூலம் இராணுவத்துக்கும் போதை வலையமைப்புக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்பதையும் விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்தது –
“போதைப்பொருள் ஒரு சட்ட பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக மற்றும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால், மக்களிடம் உண்மையான பொறுப்பு உணர்வு கொண்ட, ஊழல் இல்லாத அரசாங்கம் தேவை,” எனக் கூறினார்.