Thayagam Tamil Radio Australia

காணிகளை தருவதாக கூறிய அரசு வீதிகளையே திறந்துள்ளது – குற்றம்சுமத்தும் மக்கள்

October 17, 2025

Spread the love

வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு, “மக்களின் காணி மக்களுக்கே” என கூறி ஆட்சியை அமைத்த அரசு, அதனை நடைமுறையில் நிறைவேற்றாமல் மாயை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர்கள் தெரிவித்ததாவது —

அரசு, மக்களின் காணிகளை மக்களிடம் கையளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், ஒரு ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. முந்தைய அரசாங்கம் விடுவிக்கத் தயாராக இருந்த சில காணிகள் மட்டுமே மக்களிடம் கையளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்–பலாலி வீதியை திறந்ததன் மூலம், உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட்டது போல தவறான தோற்றம் அளிக்கப்படுகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பலாலி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்; அவர்களின் சொந்த காணிகள் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. இதனிடையே, இராணுவ வைத்தியசாலைக்கு அடுத்த பகுதியில் உள்ள தனியார் காணிகள் சிலவும் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக கூறப்பட்டது.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கீரிமலை பகுதியில் 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க முயற்சி செய்வதாகவும், ஜனாதிபதியின் வாக்குறுதி போல் மக்களின் காணிகள் உண்மையாகவே மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.