Thayagam Tamil Radio Australia

தப்பியோடிய 54ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை

October 17, 2025

Spread the love

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை, தப்பியோடிய முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 54,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உத்தியோகபூர்வ விடுப்பு எடுக்காமல் சேவைக்கு வராமல் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் காணாமற்போனது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல கட்டமைக்கப்பட்ட குற்றச் செயல்களில், இத்தகைய தப்பியோடிய முப்படையினரே ஈடுபட்டிருந்தது விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது —
இவ்வாண்டின் அக்டோபர் மாதத்திற்குள் மொத்தம் 54,087 முப்படையினர் தப்பியோடியுள்ளனர். இதில்,

  • இலங்கை இராணுவம்: 385 அதிகாரிகள் மற்றும் 47,265 வீரர்கள்
  • இலங்கை விமானப்படை: 46 அதிகாரிகள் மற்றும் 3,396 வீரர்கள்
  • இலங்கை கடற்படை: 87 அதிகாரிகள் மற்றும் 3,108 வீரர்கள்

மேலும், 359 பேர் விடுப்பு இல்லாமல் வெளிநாடுகளில் தங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டரீதியாக பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொள்கிற தப்பியோடிய அதிகாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.