Thayagam Tamil Radio Australia

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் பலி

October 15, 2025

Spread the love

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் டாக்காவின் மிர்பூர் பகுதியில் அமைந்திருந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் இயங்கிவந்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று நண்பகல் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் மூன்று மணி நேர கடுமையான முயற்சியின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் அருகிலிருந்த இரசாயனக் களஞ்சியத்திலும் தீ பரவியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. அங்கிருந்த பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெரோக்சைடு போன்ற பொருட்கள் தீயை வேகமாகப் பரவச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்ததாவது, இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அவை மிகுந்த அளவில் கருகியுள்ளதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. மேலும், தீயின்போது வெளிவந்த நச்சு வாயுவை சுவாசித்ததாலேயே பலர் உடனடியாக உயிரிழந்திருக்கலாம் என தீயணைப்பு துறையின் பணிப்பாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அந்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையின் உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும், குறித்த களஞ்சியசாலை சட்டபூர்வமாக இயங்கியதா என்பது தொடர்பான விசாரணையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.