தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் வெடித்துள்ள இளைஞர் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறிப்பிடப்படுகிறது.
மடகஸ்காரின் மின்சாரம் உற்பத்தி பெரும்பாலும் நீர்மின் நிலையங்களிலும் பழைய எரிபொருள் ஆலைகளிலும் சார்ந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீண்டகால மழைக்குறைவு ஏற்பட்டதால், அணைகளில் தண்ணீர் அளவு குறைந்தது. இதனால் நீர்மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், நீர்வள மேலாண்மைக்கு தேவையான அரசு முதலீடு குறைவாக இருந்தது. அதேசமயம், மின்சாரம் உற்பத்திக்கான எரிபொருள் இறக்குமதி செலவுகள் அதிகரித்தது, இதனால் மின் உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் உயரும் நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில், மடகஸ்காரின் பல பகுதிகள் நாட்தோறும் நீண்ட நேர மின்தடை மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு அனுபவிக்க தொடங்கின.
ஆனால் மக்களின் அதிருப்தி இதிலேயே முடிவடையவில்லை. மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளின் குறைபாடுகளுக்குப் பின்னால், அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை புறக்கணித்தல் என்பதே உண்மையான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நீண்டநாள் பிரச்சினைகளால் திணறிய இளைஞர்கள், குறிப்பாக ஜென் Z தலைமுறை, அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பெரும் அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுவே இன்று மடகஸ்காரில் உருவாகியுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் அடிப்படை காரணமாக மாறியுள்ளது.