Thayagam Tamil Radio Australia

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் – சுகாதார சிற்றூழியர் கைது

September 25, 2025

Spread the love

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயதுடைய சுகாதார சிற்றூழியர் ஒருவர், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து, அதை கட்டிலின் கீழ் மறைத்துவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு பிள்ளைகளின் தாயான இவர், செப்டம்பர் 22ஆம் திகதி பணியில் இருந்தபோது பிரசவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், குழந்தையை பெட்டியில் வைத்து மறைத்த நிலையில், அவர் கடமைகளைத் தொடர்ந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கினை கவனித்த தாதியர் ஒருவரின் முயற்சியால் வைத்தியர்கள் பரிசோதித்தபோது, அவர் குழந்தையைப் பெற்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தேடப்பட்டபோது, பெட்டியில் மறைக்கப்பட்டிருந்த பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த சிற்றூழியரின் கணவரும் அதே வைத்தியசாலையில் பணியாற்றி வருகிறார். எனினும், குடும்பத் தகராறு காரணமாக இருவரும் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.

38 வார கர்ப்பத்தில் பிறந்த குழந்தை 2.485 கிலோ எடை கொண்டிருந்தது. உயிரிழந்த குழந்தையின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், பிரிந்த கணவர் குழந்தை தனது பிள்ளை அல்ல எனக் கூறியிருப்பதால், டிஎன்ஏ பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு CID மேற்கொண்டு வருகின்றது.