செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை விரிவாக்கும் பணிகள் இன்றும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சித்துப்பாத்தியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளிலிருந்து இதுவரை 147 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்கேன் பரிசோதனையினூடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ்வுகளை மேற்கொள்ள தேவையான பாதீடு தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பாதீடு அனுமதி கிடைத்த பின்னர் மட்டுமே புதிய இடங்களில் அகழ்வுப் பணிகளை தொடங்க முடியும் என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் மூன்றாவது அமர்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை அகழ்வது தொடர்பான வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
குறித்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேற்றைய விசாரணையில் நீதவான் ஏ.ரஞ்சித்குமார் குறித்த மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உத்தரவிட்டுள்ளார்.
நீதி அதிகாரிகள், மனிதப் புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் 1990 ஆம் ஆண்டு காத்தான்குடிக்கு பயணித்த பொதுமக்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.