அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் நாட்களில் விதிக்கப்படவுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் வாகன பயனர்களுக்கு இருமுறை வரி விதிக்கப்படுவதாக சமூகத்தில் பரவிய கருத்து தவறானது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போது பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், மின்சார வாகனங்களிடமிருந்து குறித்த வரியை வசூலிக்க முடியாததால், புதிய சாலை பயனர் வரி அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காகவே இந்த வரி பயன்படுத்தப்பட வேண்டும். அதற்காக மின்சார வாகன உரிமையாளர்களும் பங்களிக்க வேண்டும் என மாநில மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் கேத்தரின் கிங் வலியுறுத்தினார்.
இன்னும் இந்த வரியை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வழிமுறை எதுவும் இல்லை. முதலில் மின்சார லாரிகள் மீது, பின்னர் வழக்கமான கார்கள் மீதும் வரியை அமல்படுத்தும் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பரந்த ஒருமித்த கருத்து எட்டப்படாததால், வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி மாநில மற்றும் கருவூல அமைச்சர்களால் பல சுற்று விவாதங்கள் நடத்தப்படவுள்ளன.