“தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
யுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஆனபோதும் அதன் காயங்கள் ஆறவில்லை. இதனால் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணைகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
வடக்கில் புலம்பெயர்வுகளைத் தடுக்க வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணம் மக்கள் இல்லாத பகுதியாக மாறக்கூடும்.
வடக்கில் மூன்று பிரதான தொழில் பேட்டைகள் உருவாக்கப்படவுள்ளன. இதனால் வடக்கு தொழில்துறை மையமாக மாறி, மக்கள் புலம்பெயர்வு குறையும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தற்போது சுதந்திரமாக தாயகத்துக்கு வருகிறார்கள். முதலீட்டு வாய்ப்புகளையும் ஆராய்கின்றனர்.
ஆட்சி பொறுப்பு ஏற்று 10 மாதங்கள் ஆகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.
காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்பது முக்கியமான உறுதி.
தையிட்டி விகாரைப் பிரச்சினை இன்னும் ஓரிரு மாதங்களில் சுமூகமாகத் தீர்க்கப்படும்.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.