செம்மணி மற்றும் சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில், எந்தவித அரசியல் அல்லது உள்ளுர் தலையீடுகளுமின்றி சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய விசாரணைகளில், முன்னாள் இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய சாட்சியங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவைத்திய அறிக்கையின் படி, செம்மணி மனிதப்புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 147 எலும்புக்கூட்டங்களில் 90%க்கும் அதிகமானவை நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்தன என்பது பெரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அகழ்வாய்வுகள் சர்வதேச கண்காணிப்புடன், தொழில்நுட்ப நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, செம்மணி அகழ்வாய்வுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகார இராஜாங்க செயலாளர் டேவிட் லமி ஆராய்ந்து வருவதாகவும் ரவிகரன் எம்.பி. குறிப்பிட்டார்.