பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்கும் சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதர் முன்வைத்தபோது, அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் இதனை கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தினால் அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் PTA நீக்கப்படும்.
- குறுகிய காலத்தில் நியமிக்கப்பட்ட குழு பலமுறை ஆலோசித்து, தேவையான திருத்தங்களைச் செய்து முடித்துள்ளது.
- அதன்படி, PTA நீக்கச் சட்டமூலம் செப்டம்பர் ஆரம்பத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்.
தற்போது அமுலில் உள்ள PTA வழியாக இன, மத அடிப்படையில் கைது செய்யப்படவில்லை; மாறாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்டவர்களையே கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.