முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம இல்லத்திற்கு, சமீப நாட்களில் தேரர்கள், பொதுமக்கள் மற்றும் சிங்கள பின்புல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் வருகை தரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
அனுராதபுரத்திலிருந்து நேற்று மட்டும் பலர் இரண்டு முதல் மூன்று பேருந்துகளில், பரிசுப் பொருட்களும் உணவுப் பண்டங்களையும் கொண்டு வந்து, மகிந்தவை சந்தித்து மரியாதை செலுத்தினர்.
இவ்வாறு அவரது இல்லம் மீது மீண்டும் திரண்டு வரும் மக்கள் கூட்டம் குறித்து,
“இது மக்களிடையே ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக நிலவிய எதிர்மறை எண்ணத்தை மாற்றுமா?”
என்பது பற்றிய விவாதங்கள் சமூகத்தில் தீவிரமாகும் நிலையில் உள்ளன.
“மகிந்த ஒரு மன்னன்” – விசுவாசியின் உரை பெரும் வரவேற்பு
இந்த சந்திப்பின் போது, ராஜபக்ச குடும்பத்தின் தீவிர ஆதரவாளரான திஸ்ஸ குட்டியாராச்சி உரையாற்றினார்.
அவர் கூறியது:
“நாம் துட்டகைமுனு மன்னனை ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்?
அவர் மக்களை காப்பாற்றியதாக நம்புகிறோம். அதுபோல, மகிந்தவும் யுத்தத்தை முடித்துக் கொண்டு வந்தவர்.
அவரும் நாட்டு மக்களை காப்பாற்றியவர்; எனவே அவரும் அரசர் தான்!”
அவரது உரை மக்களை ஆவேசப்படுத்தியதாகவும், அந்தக் காட்சிகள் தென்னிலங்கை ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவின் காலில் விழுந்து அழும் பெண்கள் – வீடியோ வைரல்
இதேவேளை, மகிந்த ராஜபக்ச லொஹான் ரத்வத்தையின் இறுதிக்கிரியைக்குச் சென்றபோது, சில பெண்கள் அவரின் காலில் விழுந்து கதறி அழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இவை அனைத்தும் சேர்ந்து, மகிந்த ராஜபக்ச மீதான மக்களின் உணர்வு நிலையை மீள மதிப்பீடு செய்யும் வகையில் வலுவூட்டும் சம்பவங்களாகக் கருதப்படுகின்றன.