வவுனியாவுக்கு சென்ற 18 வயது இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்கி, அவரது வங்கி அட்டையை பறித்து பணம் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த வெள்ளிக்கிழமை நின்றுகொண்டிருந்த 18 வயதான இளைஞனை, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர், தனியார் கார் மூலம் குடியிருப்பு குளக்கட்டு பகுதியிற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவரை தாக்கி, வங்கிக் கார்டை பறித்து 50,000 ரூபாயை பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர், தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீண்டும் புதிய பேருந்து நிலையம் முன் இறக்கிவிட்டு, குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது, மானிப்பாயைச் சேர்ந்த 19 வயதான இருவர் மற்றும் 21 வயதான இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது வவுனியாவில் விசாரணைச் சபைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.