போர்மூட்டும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களில், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தற்போதைய நிலைமையால் சிக்கித் தவித்து வரும் மேலும் மூன்று இலங்கையர்கள், நாளை (ஜூன் 24) எய்லாட் (Eilat) நகருக்கு சென்று, தாபா (Taba) எல்லை வழியாக எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் சென்ற பின்னர், நாடு திரும்ப உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், 12 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக நேற்று தூதரகத்தில் பதிவுசெய்துள்ளனர். அவர்களை நாடு திரும்பச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தூதுவர் கூறினார்.
இதேநேரம், ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து இந்தியன் எயார்லைன்ஸ் (Air India) மூலம் புது டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களில் சில இருக்கைகள், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தால் இலங்கையர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.