கதிர்காம திருத்தலத்திற்கான ஆண்டுப் பக்தி யாத்திரையை முன்னிட்டு, குமுண் தேசிய பூங்கா உடான காட்டுவழிப் பாதை இன்று (வெள்ளிக்கிழமை) உகந்தை மலை தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
பூஜைகளுக்குப் பிறகு “ஆரோஹரா” என்ற பக்தி கோஷங்களுடன், பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை யாத்திரையை இன்று ஆரம்பித்தனர். காட்டுப் பகுதிகளின் வழியாகவே பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிர்காம புனித தலத்துக்குச் செல்லும் இப்பாதை, ஆண்டுதோறும் யாத்திரையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வழியாகும்.
கதிர்காம திருவிழா ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 11ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்த வருடத்தில் 30,000க்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், பாதுகாப்பு விசயங்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.