Thayagam Tamil Radio Australia

நல்லூர் பிரதேச சபைக்கு புதிய திண்மக் கழிவகற்றல் திட்டம் – காரைமுனங்கில் புதிய மையம் அமைக்க திட்டம்!

June 20, 2025

Spread the love

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில், புதிய திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபைத் தலைவர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிலைமை சிக்கலாக மாறியுள்ளதா?

முன்னதாக நிலைபெற்றிருந்த கழிவகற்றல் முறை தற்போது பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், மாற்றிடத்துக்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காரைக்கால் பகுதியில் எதிர்ப்பு; காரைமுனங்கில் புதிய மையம்

தற்சமயம் கழிவுகளை தரம் பிரிக்கும் நடவடிக்கைக்கான இடங்களில் வேலைத்தொடர்கள் உள்ளதன் காரணமாக, திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், காரைக்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பினால், தொடர்ச்சியாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான மாற்றிடமாக, நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்திற்கு அருகில் புதிய கழிவகற்றல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதிப் பங்களிப்பு கிடைத்துள்ளதுடன், முழுமையான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பமாகும்,” என பத்மநாதன் மயூரன் உறுதியாகக் கூறினார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

“திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்கினால் அகற்றும் பணிகள் எளிதாகும். பிரதேசத்தின் தூய்மை ஒவ்வொருவரின் கையிலும் உள்ளது. பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் இத்திட்டத்திற்கு மிக அவசியம்,” என அவர் வலியுறுத்தினார்.

அடுத்த சில வாரங்களில் முழுமையான வினைத்திறனுடன் திண்மக் கழிவகற்றல் நடைமுறைக்கு வரும் எனவும், நல்லூர் பிரதேச சபை உறுதியளிக்கின்றது.