செம்மணிப்புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், அதன் முழுமையான நீட்சி கண்டறியப்பட வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்காக எந்தவொரு காரணத்தையும் முன்வைத்து அகழ்வுகளை இடைநிறுத்துவது தவறானதாகும் என்றும், நீதியை நிலைநாட்டும் இந்த செயலில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த போது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவலநிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும் நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.
போருக்குப் பின்னரான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில் வெளிக்கிளம்பிய வண்ணமேயுள்ளன.
செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரியவகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்படவேண்டும் என்பதுடன் புதை குழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது.
உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இவ்விடயங்களில் எந்தவித நெகிழ்வுமற்று செயற்படவேண்டிய பொறுப்பு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்குரியது – என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.