பங்களாதேஷில் சமீப காலமாக திருமணத்தின் பெயரில் மனிதக் கடத்தல் மற்றும் மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், டாக்காவில் உள்ள சீன தூதரகம் முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தூதரக அறிக்கையில், சீன இளைஞர்கள் பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யும் முயற்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில தரகர்கள் ஆன்லைன் விளம்பரங்கள், வீடியோ கலந்துரையாடல்கள் மற்றும் பணம் தரும் ஒப்பந்தங்கள் மூலம் பெண்களை சீன மணமகன்களுடன் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மணப்பெண் தட்டுப்பாடு காரணமா?
சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனால் சிலர் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்யும் நோக்கத்தில் செயல்படுவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பெண்கள் சில நேரங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டு சீன இளைஞர்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், மனிதக் கடத்தலுக்கு வழிவகுக்கும் ஆபத்தான போக்காகவும் கூறப்படுகிறது.
விழிப்புணர்வு தேவை:
இத்தகைய மோசடிகளைத் தடுக்கும் வகையில், பொதுமக்களும், குறித்த நபர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.