இலங்கையில் நிலவும் உப்பு பற்றாக்குறை, உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் நேரடி விளைவாக இருப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் போரால் உப்பு இறக்குமதி தாமதமாகியுள்ளதாகவும், புதன்கிழமையன்று (மே 21) இந்தியாவிலிருந்து ஒரு உப்பு கப்பல் இலங்கை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 19) புத்தளம் பாலாவி உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்து, உற்பத்தி குறைவின் காரணங்களை நேரில் ஆய்வு செய்தனர். இதில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
“உப்பு உற்பத்திக்கு நீர், காற்று, வெப்பம் இவை மூன்றும் தேவை. ஆனால், கடந்த வாரங்களில் மழை பெருமளவில் பெய்துள்ளதால் ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு, புத்தளம் போன்ற முக்கிய உற்பத்தி பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.
தற்போது காணப்படும் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் அதிகாரிகளும் பொறுப்பல்ல என்றும், இது இயற்கையின் விளைவு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உணவு, கைத்தொழில், உரத் தேவைகள் போன்ற பல துறைகளுக்கு உப்பு அவசியம் என்பதால், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து உப்பு இறக்குமதிக்கு மார்ச் 24ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இப்போது, வானிலை மாற்றம் இல்லாமல் நீடித்த வெப்பநிலை நிலவினால், உப்பு உற்பத்தி மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்றும், அடுத்த ஆண்டுக்கான முறையான உற்பத்தி திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.