யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் நடைபெற்று வந்த அகழ்வு பணிகள், தொடர்ச்சியான மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்காக, நல்லூர் பிரதேச சபை கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டியபோது, அங்கிருந்து பல மனிதச் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சிதிலங்கள், 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்குட்படுத்தி, முறையாக அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகின. வெள்ளிக்கிழமை, அகழ்வின் இரண்டாம் நாளில், முழுமையான மனித எலும்புத்தொகுதியும், மேலும் மண்டையோடு மற்றும் கை எலும்புத் துண்டும் மீட்கப்பட்டது.
முக்கியமாக, இவை அனைத்தும் அகழப்படும் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் மற்றும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக, அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.