இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிலவும் பாதுகாப்பு பதற்றத்தைக் தொடர்ந்து, இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த இடைநிறுத்தம், ப்ளே-ஆஃப் சுற்றுகள் உட்பட 16 முக்கிய போட்டிகளை பாதித்துள்ளது. இந்நிலையில், தொடரின் எதிர்காலம் குறித்து சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) ஐ.பி.எல். தொடருக்குத் தேவையான மாற்று தளமாக முன்வந்துள்ளது.
இந்த சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்தியா தொடர்ந்து போட்டிகளை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், இந்த ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பாக செப்டம்பர் மாதத்தில், மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளதாகவும், அத்துடன் இது தொடர்பான திட்டங்கள் தயாராகவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த அறிவிப்பை BCCI இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசனைகள், மற்றும் சர்வதேச வீரர்களின் பயண அனுமதிகள் ஆகியவை அனைத்தும் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.