19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முக்கியமான போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணியை விமத் தினசர (Vimath Dinasara) வழிநடத்தவுள்ளார். அயர்லாந்து அணிக்கு ஒலிவர் ரிலே (Oliver Riley) தலைமை தாங்குகிறார்.
‘ஏ’ பிரிவின் (Group A) கீழ் போட்டியிடும் இலங்கை அணி, கடந்த போட்டியில் ஜப்பான் அணிக்கு எதிராக 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 387 ஓட்டங்களை குவித்தது. இதற்குப் பதிலடி கொடுத்த ஜப்பான் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. ஜப்பான் அணிக்கு எதிரான இந்த இமாலய வெற்றியின் உற்சாகத்துடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.