அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடுகள் சுயமுரண்பாடு கொண்டவை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் முன்வைத்த முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு:
- கஜேந்திரகுமாரின் முரண்பட்ட நிலைப்பாடு: 13-ம் திருத்தச் சட்டம் ஒற்றையாட்சி முறைமைக்குள் முடங்கிப்போகும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கஜேந்திரகுமார் கூறுவது அவரது அரசியல் சுயமுரண்பாட்டைக் காட்டுகிறது என்று சிவஞானம் சாடினார்.
- ஜெய்சங்கருடனான சந்திப்பு: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது சமஷ்டி பற்றிப் பேசவில்லை என கஜேந்திரகுமார் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. இராஜதந்திர நடைமுறைகளின்படி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமே மகஜர் கையளிக்கப்பட்டது.
- சமஷ்டி கோரிக்கை: குறித்த சந்திப்பில் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தது தாமே என்றும், அதன் இறுதிப் பகுதியில் எமது இறுதி இலக்கு ‘கூட்டாட்சி சமஷ்டி’ தான் என்பதைத் தெள்ளத்தெளிவாக வலியுறுத்தியதாகவும் சிவஞானம் விளக்கமளித்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு முன்வைக்கப்பட்ட கடிதத்தின் நோக்கங்கள் குறித்தும் அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
- மாகாண சபை முறைமை: மாகாண சபை என்பது இந்தியாவின் சிந்தனையில் உருவான ஒன்று என்பதால், நீண்டகாலமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
- தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடு: மாகாண சபை முறைமை என்பது ஒரு முழுமையான தீர்வு என்றோ அல்லது அதனை முழுமையாக ஏற்பதாகவோ தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் கூறவில்லை என்றும், உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
Post Views: 250