யாழ் அரியாலை மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
மயானத்தில் தகனமேடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்தன. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்திய நிலையில் குறித்த இடத்தை நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பார்வையிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீதிபதி கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக அறிந்தேன்.
ஆகவே கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் தலையிட போவதில்லை. அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்