யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கா உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
இதொரு சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால் , குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர்.
பயணிகள் உள்ளே வருவதற்கும் , வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம்.
விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும் இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.