2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடப் போவதில்லை என பாகிஸ்தான் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் விளையாடப் பாதுகாப்பு காரணங்களால் மறுப்பு தெரிவித்த பங்களாதேஷ் அணியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தொடரிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு ஆதரவாகவும், ஐசிசியின் முடிவுக்கு எதிராகவும் இந்த நிலைப்பாட்டை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா, “இது வாரியத்தின் முடிவு என்பதால் எங்களால் இதில் தலையிட முடியாது. அரசின் உத்தரவை நாங்கள் அப்படியே பின்பற்றுவோம்,” எனத் தெரிவித்துள்ளார். எனினும், மற்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த முடிவுக்குப் பதிலளித்துள்ள இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், இந்தியா எப்போதுமே விளையாடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்:
“பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். ஐசிசி முறைப்படி அட்டவணையை உருவாக்கியுள்ளது. நாங்கள் விளையாடத் தயாராகவே இருக்கிறோம். டெல்லிப் போட்டிக்குப் பிறகு கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டுகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.”
பிப்ரவரி 15 அன்று கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்த முடிவில் உறுதியாக இருக்குமா அல்லது ஐசிசி தலையிடுமா என்பதே தற்போதைய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.