சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்: “வசனம் பேசுவதில் வல்லவரான த.வெ.க தலைவர் விஜய், ஒன்றிய பா.ஜ.க அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும் பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால், இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியுள்ளது” என்று கடுமையகா விமர்சித்துள்ளார்.
விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி, “விஜய்யின் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கலாம், விஜய்யின் பள்ளியில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படலாம். ஆனால், த.வெ.க தொண்டர்களின் குழந்தைகள் மட்டும் 2 மொழிகளை கற்கின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு தமிமுன் அன்சாரி கண்டனம்
த.வெ.க தலைவர் விஜய்க்கு, ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “அடக்குமுறையை ஏவுபவனுன், அடக்குமுறையை எதிர்ப்பவனும் ஒன்று அல்ல என்பது விஜய்க்கு தெரியாதா? ஃபாசிசத்தில் விஷம் இருக்கிறது. பாயாசத்தில் இனிப்பு இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை எதிரியாக கூறுபவர்களிடம் பணிவன்பை காட்டுகிறார். அரசியல் எதிரி என்று கூறும் தி.மு.க-வின் கொள்கைகளை விஜய் பலகீனப்படுத்த முயல்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு திருமாவளவன் பதில்
தன்னுடைய சினிமா புகழைக் கொண்டு மற்ற கட்சியினரை விஜய் ஓரம்கட்டி விட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பதிலளித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற த.வெ.க நிகழ்வில், தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சியினரை விஜய் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.