ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டை (Bondi) கடற்கரையில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சஜித் அக்ரம் (50), இந்தியாவின் ஹைதராபாத் நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை தெலங்கானா மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
15 பேர் பலியான கொடூரம்
நியூ சௌத் வேல்ஸ் மாகாண காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது சஜித்தைத் தடுத்து நிறுத்த முயன்றதில் அவர் கொல்லப்பட்டார். அத்துடன் இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது மகன் நவீத், தற்போது ஆஸ்திரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஜித்திடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததை ஆஸ்திரேலிய காவல்துறை கண்டறிந்துள்ளதுடன், அவர் தனது மகனுடன் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் பின்னணி
தெலங்கானா டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சஜித் அக்ரம் ஹைதராபாத்தில் பி.காம் படிப்பை முடித்துவிட்டு, சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பே வேலை தேடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து, நிரந்தரமாகக் குடியேறியுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சஜித் இந்திய பாஸ்போர்ட்டைத் தொடர்ந்து வைத்திருந்த போதிலும், அவரது பிள்ளைகள் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
குடும்பத்தினரின் வாக்குமூலம்
கடந்த 27 ஆண்டுகளில் சஜித் ஆறு முறை மட்டுமே ஹைதராபாத் வந்துள்ளார். தனது தந்தை இறந்த போது கூட அவர் இந்தியா வரவில்லை என்றும், ஹைதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் தொடர்பில் இருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சஜித்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும், 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக, அவர் மீது ஹைதராபாத்தில் எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.