அமெரிக்காவிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் அவர்களின் DNA மாதிரிகளைக் (DNA Samples) கோருவதற்கு அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட, விசா விலக்கு அளிக்கப்பட்ட 42 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குள் நுழையப் பயன்படுத்தும் ESTA (மின்னணு பயண அங்கீகார முறைமை) திட்டத்தின் கீழ் இந்த புதிய விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமையின் (US Customs and Border Protection) ஒரு முன்மொழிவு ஆவணத்தில், அமெரிக்காவுக்கு வரும் பயணிகளிடமிருந்து DNA உட்பட “அதிக மதிப்புள்ள தரவுகளை” கோர முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து கருத்துத் தெரிவித்த மேற்கு ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பசில் செம்பிலாஸ், DNA கேட்பது “மிகவும் எல்லை மீறிய செயல்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவுக்குச் செல்வது குறித்து மறுபரிசீலனை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப் புதிய விதிகளின் கீழ், ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடந்த ஐந்து ஆண்டுகள் வரையிலான சமூக ஊடக வரலாற்றைத் (Social Media History) தெரிவிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
தேசிய செனட்டர் மாட் கனவான், சுற்றுலாப் பயணிகளின் DNA தேவைப்படுவது “கவலை அளிக்கிறது” என்று ஒப்புக்கொண்ட போதிலும், ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் அமெரிக்காவிற்கு அதன் எல்லைகளைப் பாதுகாப்பது குறித்த முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ளது என்றும் வாதிட்டார். இருப்பினும், இது தற்போது ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது என்றும், இது நடைமுறைக்கு வருவதற்கு முன் ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செனட்டர் கனவான், இந்த DNA தேவை நடைமுறைக்கு வந்தால், அது மக்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது பற்றி “இரண்டு முறை யோசிக்க வைக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
