இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய அதிகாரி, 2020 செப்டம்பர் 5 ஆம் திகதி நள்ளிரவில் படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் தரையிறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 23 கிலோ ஹெராயின் மாயமான சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு, அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், குறித்த போதைப்பொருளை இந்த அதிகாரி தான் கடத்தி தந்ததாக அவரது சகோதரர் சாட்சியம் வழங்கியிருந்தார்.
விசாரணையின் போது, போதைப்பொருள் கடத்தலில் சகோதரர் தன்னை மாட்டியதாகவும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் அந்த பொலிஸ் அதிகாரி விளக்கமளித்தார்.
இதையடுத்து, அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பில், ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான், குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
ஆனால், அவர் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை மற்றும் சிறப்பு முகாமில் தண்டனையை அனுபவித்திருப்பதால், நீதிபதி அவரை விடுதலை செய்தார். மேலும், காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை நிறைவு செய்த பின் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என உத்தரவிடப்பட்டார்.