Thayagam Tamil Radio Australia

சிவலிங்கம் அசோக்குமார் வேலணை பிரதேச சபை தவிசையாளராக போட்டியின்றி தேர்வு

June 20, 2025

Spread the love

வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் போட்டியின்றி தெரிவாகியுள்ளார். இந்த தெரிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வேலணை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன. நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமை வகித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், 20 ஆசனங்களை கொண்டிருந்த வேலணை பிரதேச சபைக்கு, ஆசன விசேட பகிர்வின் அடிப்படையில் 2 கூடுதல் ஆசனங்கள் வழங்கப்பட்ட நிலையில், மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், இலங்கைத் தமிழரசு கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் பெற்றிருந்தன. தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மூன்று சுயேச்சைக் குழுக்களும் தலா ஒரு ஆசனத்தை பெற்றிருந்தன.

இந்த சூழலில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டபோது வேறு எந்த நபரின் பெயரும் முன்மொழியப்படவில்லை. எனவே, அவர் போட்டியின்றி தெரிவானார். இதனைத் தொடர்ந்து, உப தவிசாளராக அதே கட்சியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் தெரிவாகினார்.

இதேவேளை, தவிசாளர் தெரிவின் போது சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.