ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மாநிலத்தின் 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உளவுத்துறை அமைப்புகளின் எச்சரிக்கையின்பேரில், மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முக்கிய சுற்றுலாத் தலங்களான குல்மார்க், சோனாமார்க், தால் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குழுமமாக அனுப்பப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், விடுமுறைக்குச் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளின் மீது பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, காஷ்மீரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வெளியேறினர்.
தற்போது சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மாநிலத்திற்குத் திரும்பத் தொடங்கியிருப்பதை அடுத்து, புதிய உளவுத்துறை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாக்குதலில் ஒருவர் உள்ளூர் பயங்கரவாதியாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளத்தாக்குகளில் உள்ள தீவிரவாதிகளின் வீடுகள் பலதும் பாதுகாப்புப் படையினரால் இடிக்கப்பட்டுள்ளன.