மூளைக்கு விஷம் நல்லது செய்ய முடியாது என்பது சரி தான். ஆனால், இதற்கும் விதி விலக்கு இருக்கிறது. மூளையில் புற்று நோய் கட்டி இருக்கும் இடத்தை விரைவில் கண்டு பிடிக்க, மருத்துவ விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த உத்திக்கு, தேளின் விஷத்தில் உள்ள ஒரு புரதம் பயன்படுகிறது.மூளைக் கட்டிகளில், ‘கிளியோமாஸ்’ வகை கட்டிக்கு சிகிச்சை தருவது கடினம். வழக்கமான கதிரியக்க சிகிச்சைகளுக்கு மசியாத இந்தப் புற்றுநோய், மூளையின் பல வகை திசுக்களிலும் வேகமாகப் பரவுவதால், மருத்துவர்களால் அதை கண்டு, நீக்குவது சவாலாக உள்ளது. தேளின் விஷத்தில் உள்ள, ‘டொசுலெரிஸ்டைடு’ என்ற வேதிப் பொருளை செயற்கை முறையில் உருவாக்கி, அதனுடன் ஒளிரும் வேதிப் பொருள் ஒன்றையும் கலந்து மூளையில் செலுத்தும் போது, அந்தக் கலவை கிளியோமாஸ்கட்டியிலுள்ள செல்களுடன் சீக்கிரம் ஐக்கியமாகி விடுகிறது.பிறகு, அகச் சிவப்புக் கதிர்கள் மூலம், ‘ஸ்கேன்’ செய்தால், மூளையில் அந்த வேதிக் கலவை ஐக்கியமாகியுள்ள இடங்கள், கிறிஸ்துமஸ் மரத்தில் விளக்குகள் எரிவது போல ஒளிர்வதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால், மூளையில் கிளியோமாஸ் கட்டி பரவியுள்ள இடங்களை, மருத்துவர்களால் துல்லியமாக அறிய முடிகிறது. வேறு வகை புற்று நோய்களையும் அறிய இந்த முறை உதவும். சோதனைகளின் போது, 17 பேருக்கு தேள் விஷ வேதிப்
பொருளை மூளையில் செலுத்திய போது, நச்சுத் தன்மையோ, பிற பக்க விளைவுகளோ ஏற்படவில்லை.