பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா எச்சரித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்திலேயே வரைவு செய்யப்படும் என, அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
“பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவருவது அவசியம். இல்லையெனில் திட்டமிட்ட குற்றவாளிகள் விடுதலை பெறும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் அதிகம். மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் இந்தச் சட்டம் மிக முக்கியமானது.”