Thayagam Tamil Radio Australia

மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வா சிலை புனரமைப்பு

July 1, 2025

Spread the love

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடை பெற்றது. நிகழ்வில் மதத் தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மதத் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சிலை உடைப்பு சம்பவம்

கடந்த ஜூன் 25ஆம் தேதி அதிகாலை, தந்தை செல்வாவின் சிலை இனம் தெரியாத நபர்களால் முற்றாக சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. குறிப்பாக, சிலையின் தலைபாகம் முற்றாக அகற்றப்பட்டிருந்தது. அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் தேடலில் தலைப்பாகம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் மன்னார் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளில், குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது நீதிமன்ற உத்தரவு பெற்றவாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.